ECONOMYMEDIA STATEMENT

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜெலாஜா ஏசான் திட்டத்தில் கூடுதல் பொருட்கள் விற்பனை

ஷா ஆலம், மார்ச் 24- நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தில் கூடுதல் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என்று நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

நடப்பிலுள்ள ஆறு அத்தியாவசியப் பொருட்களோடு நோன்புப் பெருநாளை கொண்டாட இருப்போரின் தேவைகேற்ப கூடுதல் பொருட்களும் இந்த விற்பனையில் சேர்க்கப்படும் என்று அவர் சொன்னார்.

பொதுமக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக மலிவு விற்பனையில் சேர்க்கப்படவுள்ள பொருட்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் வழி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எளிதாகவும் அதேவேளையில் நியாயமான விலையிலும் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் அதிகம் வசிக்கும் பகுதிகளை இலக்காக கொண்டு இந்த மலிவு விற்பனை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளது. அதிகமானோர் பயனடைவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த மலிவு விற்பனை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

ரமலான் மாதத்தின் போது ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மலிவு விற்பனை நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது கூறியிருந்தார்.


Pengarang :