ECONOMYMEDIA STATEMENT

அதிகமான இந்திய சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் “சித்தம்“ திட்டங்கள் மறுசீரமைப்பு- நிர்வாகி கென்னத் தகவல்

ஷா ஆலம், மார்ச் 26- அதிகமான இந்திய சிறு வணிகர்கள் பயன் பெறும் வகையில் “சித்தம்“ எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையம் தனது திட்டங்களை மறுசீரமைப்பு செய்யவிருக்கிறது.

இந்த சீரமைப்புத் திட்டத்தின் கீழ் “சித்தம்“ அமைப்பினால் இதுநாள் வரை அமல்படுத்தப்பட்டு வந்த வர்த்தக உபகரண உதவித் திட்டம் “ராய்ஸ்“ (RISE) என மறுவடிவம் பெறும் என்று அந்த அமைப்பின் நிர்வாகி எஸ்.கென்னத் சேம் கூறினார்.

இந்த “ராய்ஸ்“ திட்டத்தின் கீழ் மலர் மற்றும் பலகாரம் உள்ளிட்ட வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் சிறு வியாபாரிகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் அதே சமயம், அங்காடி வண்டி, குடை, சமையல் உபகரணம் போன்ற வியாபார  அமைப்பிற்கு   தேவையான  உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்படும். இது மட்டுமின்றி அவர்கள் வியாபாரத்தை முறையாக நடத்துவதற்கு ஏதுவாக ஊராட்சி மன்ற லைசென்ஸ் பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் அதிகளவில் பயன் பெறுவதற்காக இந்த  திட்டத்தை தாங்கள் அறிமுகப்படுத்துவதாகக் கூறிய அவர், முதல் கட்டமாக இத்திட்டத்தை பரீட்சார்த்த முறையில் ஷா ஆலம், செக்சன் 18 ஆலய வளாகத்தில் விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகச் சொன்னார்.

இந்த புதிய திட்டத்திற்கு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் ஒப்புதல் அளித்துள்ளதாக சித்தம் நிர்வாகப் பொறுப்பினை புதிதாக ஏற்றுள்ள கென்னத் தெரிவித்தார்.


Pengarang :