SELANGOR

புயல் காற்றில் பாதிக்கப்பட்ட கிள்ளான், பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்குக் குணராஜ் வருகை

கிள்ளான், மார்ச் 29- கிள்ளான் மற்றும் ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று
மாலை பெய்த பலத்தக் காற்றுடன் கூடிய கனத்த மழையில் இங்குள்ள
பத்து அம்பாட் பள்ளி சேதமடைந்தது.

மாலை மணி 4.30 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த பள்ளியின்
கூரைகள் மற்றும் உட்கூரைகள் உடைந்ததோடு மரம் விழுந்து பள்ளியின்
வேலி மற்றும் கட்டிடத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து நேற்று மாலை பள்ளிக்கு விரைந்த
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ், பள்ளியில் ஏற்பட்ட
சேதங்களைப் பார்வையிட்டதோடு அவற்றை சரி செய்வதில் கல்வி
இலாகா மற்றும் மாநில அரசின் ஒத்துழைப்பு தாம் நாடவிருப்பதாக
குறிப்பிட்டார்.

இந்த இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான
தரவுகளைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி வாரியமும் தயார்
செய்தப் பின்னர் சம்பந்தப்பட்டத் தரப்பினரின் கவனத்திற்கு இவ்விவகாரம்
கொண்டுச் செல்லப்படும் என்றார் அவர்.

இதனிடையே, பலத்தக் காற்றுடன் கூடிய மழையின் காரணமாகக் கூரைகள்
பெயர்ந்து ஆசிரியர் அறை மற்றும் வகுப்பறைகளில் நீர் புகுந்ததாகப்
பள்ளியின் வாரியத் தலைவர் வைரப்பெருமாள் ராசலிங்கம் கூறினார்.

தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த பள்ளி வாரியம் மற்றும் பெற்றோர்
ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் பள்ளி வளாகத்தில் சிதறிக் கிடந்த
உடைத்த ஓடுகளை அப்புறப்படுத்தியதோடு வகுப்பறைகளில்
தேங்கியிருந்த நீரையும் சுத்தம் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளியில் உள்ள கட்டிடங்கள் பழையவையாக உள்ளதால் புயல்
காற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை

உறுதி செய்வதற்கு ஏதுவாக உடனடியாக பழுதுபார்ப்புப் பணிகளை
மேற்கொள்ளவிருக்கிறோம். இந்தப் பாதிப்புகளைச் சரி செய்வதற்கு 30,000
வெள்ளி வரை செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர்
சொன்னார்.


Pengarang :