ECONOMYPBT

1,447 வர்த்த மையங்களில் எம்.பி.கே. சோதனை- 945 குற்றப்பதிவுகள் வெளியீடு

கிள்ளான், மார்ச் 31- இம்மாதம் முதல் தேதி தொடங்கி நேற்று வரை கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட ஜே-போர்ஸ் எனும்  தூய்மை அமலாக்க நடவடிக்கையில் 1,447 வர்த்தக வளாகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு 945 வளாகங்களுக்கு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன.

இந்த சோதனைகளின் போது ஏழு வர்த்தக வளாகங்கள் மூடப்பட்ட வேளையில் 23 வளாகங்களுக்குச் சீல் வைக்கப்பட்டதாக நகராண்மை கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

இது தவிர 35 எச்சரிக்கை அறிக்கைளும் 305 வாய்மொழி எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன. கிள்ளான் நகரம் எப்போதும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கையின் போது வெளியிடப்பட்ட குற்றப்பதிவுகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய முடியாது என்பதோடு அபராதத் தொகையும் குறைக்கப்படாது என்று அவர் சொன்னார். கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்தையொட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் நோராய்னி இதனைத் தெரிவித்தார்.

நோன்பு மாதத்தின் போது குப்பைகளின் அளவைக் கட்டுப்படுத்தும்படியும் அவர் கிள்ளான் வட்டார மக்களைக் கேட்டுக் கொண்டார். ரமலான் சந்தைகள்  மற்றும் பெருநாளை முன்னிட்டு பழையத் தளவாடங்கள் மற்றும் தேவையற்றப் பொருள்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் குப்பைகள் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


Pengarang :