ECONOMYMEDIA STATEMENT

“சித்தம்“ புதிய திட்டங்கள் குறித்து இந்திய சமூகத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பு

ஷா ஆலம், மார்ச் 31- “சித்தம்“ எனப்படும் இந்திய  தொழில் ஆர்வலர் மையத்தின் புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட திட்டங்கள் குறித்த விளக்கமளிப்பு கூட்டம் இன்று இங்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட இந்திய சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி, திறன் மற்றும் உற்பத்திப் பயிற்சி, குரோ எனப்படும் வர்த்தக வழிகாட்டித் திட்டம் மற்றும் வர்த்தக உபகரண உதவித் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள உருமாற்றம் மற்றும் மேம்பாடுகள் குறித்து சித்தம் நிர்வாகி எஸ்.கென்னத் சேம் விளக்கமளித்தார்.

குறிப்பாக தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டது மற்றும் வர்த்தக உபகரண உதவித் திட்டம் “ரைஸ்“ எனும் பெயரில் உருமாற்றம் செய்யப்பட்டு அந்த பணி இலக்கும் மாற்றியமைக்ப்பட்டது குறித்து அவர் எடுத்துரைத்தார்.

சித்தம் திட்டம் வாயிலாக மேலும் அதிகமானோர் குறிப்பாக இந்திய தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சித்தம் வாயிலாக வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை இந்திய சமூகம் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதில் இந்திய சமூகத் தலைவர்கள் உரிய பங்கினை ஆற்றுவார்கள் எனத் தாம் பெரிதும் எதிர்பார்ப் பதாகவும் அவர் சொன்னார்.

இந்த திட்டங்கள் தொடர்பில் சமூகத் தலைவர்கள் எழுப்பிய வேள்விகள் மற்றும் ஐயப்பாடுகளுக்கு சித்தம் பொறுப்பாளர்கள் தெளிவான விளக்கத்தை அளித்தனர். 


Pengarang :