EKSKLUSIFNATIONAL

குடியுரிமைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பீர்!  மக்களவையில் டத்தோ ரமணன் கோரிக்கை

 கோலாலம்பூர், ஏப் 1- குடியுரிமையைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிவப்பு, பச்சை நிற அடையாள அட்டையை கொண்டிருப்பவர்களின் பிரச்சினைகளை உள்துறை அமைச்சு விரைந்து தீர்க்க வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். 

மக்களவையில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற உள்துறை அமைச்சின் நடவடிக்கை பி மற்றும் பி.62 அமர்வின் மீதான விவாதத்தின் போது, அவர் மூன்று விவகாரங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். 

முதலாவதாக, மலேசியாவில் பிறந்து நீல நிற அடையாள அட்டையைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருபவர்களின் நிலை உணர்ந்து பேசிய டத்தோ ரமணன்குடிமக்கள் என்ற அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் அவர்கள் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சு இவ்விவகாரத்திற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

 இரண்டாவதாகநாடற்ற குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி விவகாரம் தொட்டு அவர் பேசினார். அப்பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக இருக்கின்ற முறையற்ற திருமணங்கள் குறித்து ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருப்பதாகவும்  இது தொடர்பில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டவிதியும் 1952ஆம் ஆண்டு தத்தெடுப்பு சட்டமும் மீண்டும் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 மூன்றாவதாக, ‘பிதர நிலை வழங்கப்பட்டுள்ள சுங்கை பூலோ போலீஸ் தலைமையகத்தின் குறைவான அடிப்படை வசதிகளும் ஆள்பல பற்றாக்குறை குறித்தும் அவர் எடுத்துரைத்தார். 167 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆள்பல பற்றாக்குறையினால் இங்கு சட்ட ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்டுவதில் போலீஸ் தரப்புக்கு சிரமம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தீர்வுக்குரிய வழிவகை உடனடியாகக் காணப்பட வேண்டும் என உள்துறை அமைச்சை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :