ECONOMYSELANGOR

தென் சீனக் கடல் விவகாரம் தீர்ப்பது எளிதல்ல, தீர்ப்பது சாத்தியமற்றதும் அல்ல- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப் 5- தென் சீனக் கடல் பிரதேசம் மீதான இரு நாடுகளின் உரிமைக் கோரல் பிரச்சினைக்கு  அவ்வளவு எளிதில் தீர்வு கண்டு  விட முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதே சமயம் கலந்து பேசுவதற்கு சாத்தியம் இருக்கும் பட்சத்தில் இவ்விவகாரத்தில் தீர்வு காண்பது சாத்தியமற்றதல்ல என்றும் அவர் சொன்னார்.

கடந்த வாரம் மேற்கொண்ட சீனப் பயணத்தின் போது அந்நாட்டின்  செல்வாக்குமிக்க ஆங்கில ஊடகமான சைனா டெய்லி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.

தென் சீனக் கடல் விவகாரத்தை பெரிதுபடுத்திப் பார்க்கக் கூடாது எனக் கூறிய அவர், அந்த கடல் பகுதியில் உள்ள வளங்களுக்கு உரிமை கோரும் அனைத்து ஆசியான் நாடுகளுடனும் கலந்துரையாடல் நடத்துவதே இதற்கான சரியான தீர்வாகும் என அவர் சொன்னார்.

அந்த கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் உள்ளன. அந்த பகுதி மீதான உரிமை கோரலை தாம் தொடர்கிறோம். அதே சமயம் சீனாவும் இவ்விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த வேண்டும் என்கிறது.  நாமும் அதற்கு தயாராக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதல்ல என்பது என்க்கும் தெரியும். ஆயினும் ஒருவரை ஒருவர் நண்பராக கருதி பேச்சு நடத்த தயாராக இருக்கும் போது தீர்வுக்கு சாத்தியம் இல்லாத பிரச்சினையாக இது அமைவதற்கு வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் புரிந்துணர்வை ஏறப்டுத்துவதற்கும் சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :