ECONOMYMEDIA STATEMENT

செந்தோசா தொகுதி நிலையிலான மலிவு விற்பனையில் 300 பேர் பங்கேற்பு

கிள்ளான், ஏப் 6- செந்தோசா சட்டமன்றத் தொகுதி நிலையிலான ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை இங்குள்ள சூராவ் கஹிரியா, தாமான் மஸ்னா பாசார் மாலாம் பகுதியில் நேற்று நடைபெற்றது.

காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற இந்த மலிவு விற்பனையில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்குவதில் பொது மக்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை ஓரளவு குறைப்பதில் இந்த மலிவு விற்பனை பெரிதும் துணை புரிந்துள்ளதாக அவர் சொன்னார்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் மாநில அரசு இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் தினசரி ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில்  மலிவு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு முழு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :