MEDIA STATEMENT

17 இருசக்கர வாகனங்கள் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆடவன் கைது

கோலாலம்பூர், ஏப் 14- இங்குள்ள சூரியா கேஎல்சிசி பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் 13 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 ஸ்கூட்டர்கள் எரியூட்டப்பட்டச் சம்பவம் தொடர்பில் உள்நாட்டு ஆடவன் ஒருவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அந்த 34 வயது ஆடவன் குற்றவியல் சட்டத்தின் 435வது பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் 19ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை அறிக்கையைத் திறந்ததாக அவர் தெரிவித்தார்.

துரிதமாக செயல்பட்ட காவல் துறையினர் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்திற்குப் பின்னர் இச்சம்பவத்தில் தொடர்புடையவன் என சந்தேகிக்கப்படும் ஆடவனை கைது செய்தனர். அவனிடமிருந்து ஹோண்டா ஆர்.எஸ். மோட்டார் சைக்கிள், கவசத் தொப்பி, ஒரு ஜோடி கையுறை, தீப்பொறிக் கருவி ஆகியவற்றைக் கைப்பற்றினர் என்றார் அவர்.

இந்த தீச் சம்பவம் தொடர்பாக தாங்கள் இதுவரை 10 புகார்களைப் பெற்றுள்ளதாக கூறிய அவர், இச் சம்பவத்திற்கு காரணம் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது என்றார்.

நேற்று மாலை 3.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒன்பது மோட்டார் சைக்கிள்களும் நான்கு ஸ்கூட்டர்களும் முற்றாக எரிந்த வேளையில் மேலும் 3 மோட்டார் சைக்கிள்கள் 20 விழுக்காடு சேதமடைந்தன.


Pengarang :