ECONOMYMEDIA STATEMENT

வெப்பம் காரணமாக புகை மூட்டம் ஏற்படும் சாத்தியத்தை எதிர் கொள்ள அரசு தயார்

கோல திரங்கானு, ஏப் 15- தீபகற்ப மலேசியாவில் தற்போது நிலவி வரும் வெப்ப சீதோஷ்ண நிலை காரணமாக புகை மூட்டப் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சு தயார் நிலையில் உள்ளது.

இதன் அடிப்படையில் சதுப்பு நிலப் பகுதிகள், அடிக்கடி தீப்பிடிக்க கூடிய இடங்கள் மற்றும் திறந்தவெளி தீயிடல் நிகழும் பகுதிகள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது கூறினார்.

புகைமூட்டம் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் இவ்விவகாரத்தை கையாள்வதற்காக அமைச்சு சந்திப்புக் கூட்டம் நடத்தும் என அவர் சொன்னார்.

புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ள கூடிய தயார் நிலை முறை நம் வசம் உள்ளது.  கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கோவிட்-19 பரவியபோது தீயிடல் சம்பவங்களும் தொழில் துறை நடவடிக்கைகளும் குறைந்து காணப்பட்டன. இப்போது நாடு பழைய நிலைக்கு திரும்பி விட்டதால் அதனால் ஏற்படும் சவால்களைச் சமாளிப்பதற்கும் நாம் தயாராக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது நிலவி வரும் வறட்சி நிலை காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியத்தையும் அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாக கூறிய அவர், தீயணைப்புத் துறையின் ஒத்துழைப்புடன் போதுமான அளவு நீர் விநியோகம் உள்ளதை உறுதி செய்யும் நடவடிக்கையிலும் அது ஈடுபட்டு வருகிறது என்றார்.


Pengarang :