ECONOMYMEDIA STATEMENT

போக்குவரத்து குற்றங்களுக்கு வெ.50.00 அபராதம்- இன்று தொடங்கி ஒரு மாதத்திற்கு அமல்

குவா மூசாங், ஏப் 21- கடந்த 2022ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் புரியப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை 50.00 வெள்ளியாக குறைக்கும் நடைமுறையை அரச மலேசிய போலீஸ் படை இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு அமல்படுத்தவுள்ளது.

அபராதம் செலுத்த முடியாதவை என வகைப்படுத்தப்பட்ட குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் முதன் முறையாக அமல்படுத்தப்படுவதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ மாட் காசிம் கரீம் கூறினார்.

மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான ஏற்பாட்டைச் செய்வதை நோக்கமாக கொண்ட இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கு 85 முதல் 86 விழுக்காடு வரை அபராதத் தொகையில் கழிவு வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

அபராதம் செலுத்த முடியாதவை மற்றும் நீதிமன்றம் செல்ல வேண்டியவை என நாங்கள் முன்பு கட்டுப்படுத்தி வைத்திருந்த குற்றப்பதிவுகள் உள்பட அனைத்து பதிவுகளுக்கும் இம்முறை குறைந்த அபராதத் தொகையை வழங்குவதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அபராதம் விதிக்க முடியாத குற்றங்கள் குறித்து பொதுமக்களில் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் அவர்களால் வாகனமோட்டும் லைசென்ஸ் மற்றும் வாகனங்களுக்கான சாலை வரியை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

இந்த சலுகையை வழங்கும் பட்சத்தில் பொது மக்களின் சுமை பெருமளவு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நேற்று குவா மூசாங் மாற்று வழித்தடத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :