ECONOMYMEDIA STATEMENT

மலையேறும் போது உடல் பருமனான ஆடவர் காயம்- 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

ஈப்போ, ஏப் 24- மஞ்சோங், புக்கிட் தீகா ரத்துசில் நேற்று மேற்கொண்ட மலையேறும் நடவடிக்கையின் போது உடல் எடை 140 கிலோ கொண்ட பருமனான ஆசாமி இடது காலில் காயங்களுக்குள்ளானார். அவரை மலையடிவாரத்திற்கு பத்திரமாக கொண்டு வருவதற்கு எட்டு தீயணைப்பு வீரர்களுக்கு நான்கு மணி நேரம் தேவைப்பட்டது.

தன் சகாக்களுடன் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அந்த 44 வயதான ஆடவர் வழுக்கி விழுந்து காலில் காயங்களுக்குள்ளானதாக ஸ்ரீ மஞ்சோங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த நபரை சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் மலையடிவாரம் கொண்டு வந்த  தீயணைப்பு வீரர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கி அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்தத் தொடர்ந்து 11 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு அங்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

அந்த ஆடவர் அந்த மலையில் 170 மீட்டர் உயரத்தில் சிக்கிக் கொண்டார். நகர முடியாத நிலையில் இருந்த அவரை காப்பாற்றுவதற்கு அவரின் சகாக்கள் தீயணைப்புத் துறையின் உதவியை நாடினர் என்றார் அவர்.


Pengarang :