ECONOMYMEDIA STATEMENT

விளையாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி கொள்ளையிட முயன்ற முதியவர் கைது

ஈப்போ, 24- முதியவர் ஒருவர் வயதுக்கு மீறி புரிந்த வரம்பு மீறிய செயல் விபரீதத்தில் முடிந்தது. விளையாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி கைப்பேசி கடை ஒன்றில் கொள்ளையிட முயன்ற போது அந்த 66 வயது ஆடவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

இச்சம்பவம் ஈப்போ, ஜாலான் ஓன் ஜாபரில் நேற்று மாலை நிகழ்ந்ததாக பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.

நேற்று மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழு அந்த உள்நாட்டு ஆடவரைக் கைது செய்ததாக அவர் சொன்னார்.

அந்த ஆடவரிடமிருந்து கைப்பை, ஒரு விளையாட்டு கைத்துப்பாக்கி மற்றும் இரு கத்திகள் பறிமுதல் செய்யப் பட்டன என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த முதியவரைக் கைது செய்ததன் வழி கடந்த மார்ச் 25ஆம் தேதி கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி நகைக் கடை ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கொள்ளை மற்றும் ஏப்ரல் 5ஆம் தேதி பல்பொருள் விற்பனை மையத்தில் நிகழ்ந்த கொள்ளை ஆகியவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைதான அந்த ஆடவருக்கு எதிராக போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தொடர்பான சில குற்றப்பதிவுகள் உள்ளதோடு அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் மோர்பின் வகை போதைப் பொருளைப் பயன்படுத்தியது தெரிய வந்தது என்றார் அவர்.

கைதான ஆடவரை குற்றவியல் சட்டத்தின் 392/397வது பிரிவுகளின் கீழ் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதியைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :