EKSKLUSIFMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் பொது உபசரிப்பில் பங்கேற்க மாநில மக்களுக்கு மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், ஏப் 24- வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் கட்டங் கட்டமாக நடத்தப் படவிருக்கும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு மாநில மக்களை மந்திரி புசார் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிப்பாங் மாவட்டத்தில் தொடங்கும் இந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வு வரும் மே 14ஆம் தேதி கோம்பாக்கில் முடிவுக்கு வரும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து ஒன்பது மாவட்டங்களிலும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை நடத்தும் பாரம்பரியத்தை இவ்வாண்டிலும் தொடரவிருக்கிறோம் என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் மாநிலத்தின் அனைத்து நிலையிலான மக்களும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் மேலும் சொன்னார்.

கடந்தாண்டு மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட இந்த பெருநாள் பொது உபசரிப்பில் 100,000 முதல் 200,000 வருகையாளர்கள் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த பொது உபசரிப்புகளில் அந்தந்த வட்டாரங்களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டதானது பெருநாள் மகிழ்ச்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்ற மாநில அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்தது என்றார் அவர்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வுகளின் போது மாநில அரசின் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்த தகவல்களும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படும். மேலும் வருகையாளர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்குரிய வாய்ப்பும் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :