ECONOMYPENDIDIKAN

கோவிட்-19 பரவலைத் தடுக்க மாணவர்களுக்கு இலவச முகக் கவசம்- சிலாங்கூர் அரசு பரிசீலனை

ஷா ஆலம், ஏப் 28- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

மாணவர்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் 40 தரப்பினரின் பிள்ளைகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதோடு மாநில கல்வி இலாகாவின் உதவியோடு இப்பணி மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மத்திய அரசாங்கத்தின் இந்த முன்னெச்சரிக்கை பரிந்துரையை ( பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை நடைமுறைப்படுத்துவது) நாங்கள் வரவேற்கிறோம். காரணம், சந்தர்ப்பவசமாக கோவிட்-19 நோய்த் தொற்றின் புதிய திரிபுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.

உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் நான் மாநில கல்வி இலாகாவைத் தொடர்பு கொள்வேன். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு மாநில அரசின் சார்பில் முகக் கவசம் வழங்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

பெர்மேடலான் நேஷனல் பெர்ஹாட் ஏற்பாட்டில் நேற்று இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு கோவிட்-19  பெருந்தொற்றுப் பிரச்சனையை எதிர்நோக்கியிருந்த போது பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 13 லட்சம் மாணவர்களுக்கு மாநில அரசு முகக் கவசங்களை இலவசமாக வழங்கியது என்பது குறிப்படத்தக்கது.


Pengarang :