ALAM SEKITAR & CUACA

குளிக்க வந்த போது நேர்ந்த துயரம்-10 வயதுச் சிறுவன் ஆற்றில் விழுந்து மரணம்

பாலிங், ஏப் 28- குளிக்க வந்த சிறுவன் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் இங்குள்ள குப்பாங், சுங்கை லீமாவ் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே நேற்று நிகழ்ந்தது.

முகமது யூசுப் கைருடின் என்ற அச்சிறுவன் நேற்று காலை 11.00 மணியளவில் தன் குடும்பத்தாருடன் அப்பகுதிக்கு குளிக்க வந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சம்சுடின் மாமாட் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்த போது அச்சிறுவனின் தாயார் தனது இதர மூன்று பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது அச்சிறுவன் சுமார் 10 மீட்டர் தொலைவில் காணப்பட்டான் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பிறகு மற்ற சிறுவர்கள் ஆற்றில் குளிக்கத் தொடங்கிய போது முகமது யூசுப் அங்கு காணப்படாததை அவரின் தாயார் உணர்ந்தார். பின்னர் அவர் ஆற்றின் சுற்று வட்டாரம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியும் அச்சிறுவன் காணப்படவில்லை என சம்சுடின் சொன்னார்.

பிறகு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அச்சிறுவனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சவப்பரிசோதனைக்காக அச்சிறுவனின் உடல் அலோர்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :