PBTSELANGOR

மருத்துவமனைகளுக்கு இலவச போக்குவரத்துச் சேவை- 1,500 பேர் பயனடைந்தனர்

ஷா ஆலம், ஏப் 28- மருத்துவமனைகளுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்கும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் திட்டத்தின் வாயிலாக இதுவரை 1,526 மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும் பயனடைந்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் பதிவான எண்ணிக்கை இதுவாகும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மருத்துவமனைகளுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்கும் ஒரே ஊராட்சி மன்றமாக ஷா ஆலம் மாநகர் மன்றம் விளங்குகிறது. உதவித் தேவைப்படுவோருக்கு குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கிலான மாநகர் மன்றத்தின் பரிவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சேவை அமைந்துள்ளது என அவர் சொன்னார்.

இத்தகைய போக்குவரத்து உதவி அதிகமானோருக்குத் தேவைப்படுவதாகக் கூறிய அவர், இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதற்கு கிடைத்து வரும் ஆதரவு சிறந்த உதாரணமாக விளங்குகிறது என்றார் அவர்.

இந்த சேவையைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக வாகனங்களில் அடிப்படை வசதியை தாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை எட்டு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு இந்த இலவச போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது.

கீழ்க்கண்ட மருத்துவமனைகளுக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.

 • செக்சன் 7  மற்றும் செக்சன் 19 சுகாதார மையங்கள்

• புக்கிட் கூடா சுகாதார மையம்

• ஷா ஆலம் பெரிய மருத்துவமனை

• சுங்கை பூலோ மருத்துவமனை

• சுங்கை பூலோ சுகாதார கிளினிக்

• தெங்கு அம்பவான் ரஹிமா மருத்துவமனை

• மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்


Pengarang :