ECONOMYMEDIA STATEMENT

விளைபொருள் உற்பத்தியை முறையாகத் திட்டமிட உதவும் புவி நடவு முறை

புத்ராஜெயா, ஏப் 28- வேளாண் பொருள் உற்பத்தியைத் திட்டமிடுவதற்கும் அதிக உற்பத்தி காரணமாக விளைபொருள்கள் வீணாவதை தடுப்பதற்கும் உதவும் வகையில் புவி நடவு முறையை அரசாங்கம் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது.

தேவை மற்றும் விநியோக அளவுக்கேற்ப வேளாண் பொருள் உற்பத்தியை திட்டமிடுவதற்கு இந்த முறை துணை புரிவதாக விவசாயத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜஹாய்மி ஹசான் கூறினார்.

அதிகப்படியான விளைபொருள் இறக்குமதி காரணமாக கிளந்தான் மாநிலத்தின் லோஜிங் மற்றும் பகாங் மாநிலத்தின் கேமரன் ஹைலண்ட்ஸ் விவசாயிகள் டன் கணக்கிலான தங்களின் விளைபொருள்களை வீச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக வெளிவந்த தகவலை தமது துறை கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

மழை காலம் முடிவுக்கு வந்தவுடன் காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்த அதேவேளையில் வெளிநாடுகளிலிருந்து விளைபொருள்கள் அதிகளவில் இறக்குமதியானது இந்த பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சந்தையில் காய்கறிகள் மிதமிஞ்சிய விவகாரத்தை தமது அமைச்சு தீவிரமாக கவனிக்கும் அதேவேளையில் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளையும் ஆராயும் என்று விவசாயம் மற்றும் உணவுத் உத்தரவாதத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :