ECONOMYMEDIA STATEMENT

ஐந்து இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை- இன்றும் நாளையும் நடைபெறும்

ஷா ஆலம், ஏப் 29- ஆறு அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் விற்பனைத் திட்டம் இன்றும் நாளையும் ஐந்து இடங்களில் நடைபெறவுள்ளது.

பந்திங் தொகுதி நிலையிலான மலிவு விற்பனை தாமான் அமானிலும் மேரு  தொகுதி நிலையிலான விற்பனை சூராவ் ஹாஜி அமினிலும் இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் என்று சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் தொடர்பு வியூகத் துறை கூறியது.

நாளை ஞாயிற்றுக்கிழமை குவாங் தொகுதியின் தாசேக் புத்ரி, புத்ரி சென்ட்ரல் பார்க்கிலும்  வங்சா மாஜூ நாடாளுன்றத் தொகுதி நிலையிலான மலிவு விற்பனை வங்சா மாஜூ டி6 மற்றும் டி7 புளோக்கிலும் பந்திங் தாமான் சூரியா பண்டார் மக்கோத்தாவிலும் நடைபெறும்.

இது தவிர, வரும் மே 2ஆம் தேதி தொடங்கி வழக்கம் போல் தினசரி ஒன்பது இடங்களில் மலிவு விற்பனை நடத்தப்படும். மக்களின் செலவினத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த விற்பனைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அத்துறை தெரிவித்தது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் மாட்டிறைச்சி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடந்தாண்டு செம்பம்பர் முதல் டிசம்பர் வரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையில் சுமார் 20 லட்சம் பேர் பயனடைந்தனர். 


Pengarang :