ECONOMYMEDIA STATEMENT

தைவான் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரு சந்தேகப் பேர்வழிகள் கே.எல்.ஐ.ஏ.வில் கைது

கோலாலம்பூர், ஏப் 29-  இம்மாதம் 20ஆம் தேதி தைவானில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அந்நாட்டைச் சேர்ந்த இரு பிரஜைகளை அரச மலேசிய போலீஸ் படையினர் இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) கைது செய்தனர்.

இம்மாதம் 20ஆம் தேதி தைவானிலிருந்து விமானம் மூலம் நாட்டிற்குள் நுழைந்த அவ்விருவரையும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

தைவானில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அவ்விருவருரையும் அந்நாட்டு போலீசார் தேடி வந்ததாக அவர் சொன்னார்.

அவ்விருவரும் தைவான் நாட்டின் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் என்பதோடு ஸ்கேம் எனப்படும் மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்று அவரை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்விரு சந்தேகப்பேர்வழிகளுக்கும் எதிராக கைது ஆணை பிறப்பித்த தைவான் அதிகாரிகள் அவர்களின் அனைத்துலக கடப்பிதழையும் ரத்து செய்து விட்டனர் என்று அக்ரில் சானி குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவ்விரு சந்தேகப் பேர்வழிகளையும் 1953/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் தாங்கள் தடுத்து வைத்ததாகவும் அவர் சொன்னார்.

கைதான இரு சந்தேகப்பேர்வழிகளும் கே.எல்.ஐ.ஏ.வில் இருந்த தைவான் போலீஸ் பிரநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறிய அவர், நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் அவர்கள் தைவானுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார்.


Pengarang :