ECONOMYMEDIA STATEMENT

தொழிலாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் செயல்முறையை மனிதவள அமைச்சகம் திருத்துகிறது

கோலாலம்பூர், மே 1 – தொழிலாளர்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், நீதியைப் பெறுவதற்கும் ஒரு வழி அமைத்து கொடுப்பதற்காக, தொழிலாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் செயல்முறையில் மனிதவள அமைச்சகம் (கேஎஸ்எம்) பல திருத்தங்களை செய்யும்.
தங்கள் நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க மறுக்கும் முதலாளிகள் இருப்பதால் இவ்விவகாரம் குறித்து அரசு உரிய கவனம் செலுத்தும் என அதன் அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்தார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நேற்று இரவு.  மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) ஏற்பாடு செய்த விழாவில் அவர் தனது உரையில், “ஊழியர்களின் தலைமையில் இயங்கும் தொழிலாளர் சங்கங்களை முதலாளிகள் அங்கீகரிக்க மறுக்கும் நிகழ்வுகள் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், தனியார் துறையினருக்கு  ஓய்வூதியம், வேலைவாய்ப்பு உத்தரவாதம், தொழிலாளர் நலத் திட்டம் மற்றும் தொழிலாளர் காப்பீடு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.

சிவகுமாரின் கூற்றுப்படி, நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் பாதுகாக்கப் படுவதையும், அவர்களின் முதலாளிகளுக்கும் நாட்டிற்கும் அவர்கள் செய்யும் பங்களிப்புகளுக்கு நிகரான சலுகைகளை வழங்குவதையும் உறுதி செய்ய அரசாங்கம் இந்த பிரச்சினைகளை சமாளிக்க முயற்சிக்கும்.
“வெளிநாட்டுத் தொழிலாளர் நலன் பிரச்சினையிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உள்ளூர் ஊழியர்களைப் போலவே வெளிநாட்டு ஊழியர்களும் சட்டங்களால் பாதுகாக்கப் படுவதையும் அவர்களின் உரிமைகள் வழங்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும், ”என்று அவர் கூறினார்.

சிவக்குமார் மேலும் கூறுகையில், வரையறுக்கப்பட்ட தகுதிகளைக் கொண்ட தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் படிப்புகள் மூலம் அவர்களின் தொழில் அல்லது கல்வியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் முதலாளிகளுடன் ஒத்துழைக்கும்.

இத்தகைய முன்முயற்சிகள் தொழிலாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தும், அவர்களின் வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகளைத் தேடுவதற்கும், உயர் பதவிகளை நிரப்புவதற்கும் சிறந்த ஊதியத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கும்.
அனைத்து முதலாளிகளும் தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்கவும் அங்கீகரிக்கவும் மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு உகந்த மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதை உறுதிப்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.

“தொழிலாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் உறுதி செய்வதற்கான கொள்கைகள் மற்றும் சட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து அறிமுகப்படுத்தும்” என்று சிவக்குமார் கூறினார்.


Pengarang :