ECONOMYPENDIDIKAN

புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைப்பதில் பள்ளிகளின் ஒத்துழைப்பு நாடப்படும்- கல்வி அமைச்சர்

ஷா ஆலம், மே 5- தற்போது நிலவி வரும் வறட்சி மற்றும் வெப்ப
நிலையை கருத்தில் கொண்டு மாணவர்கள் சம்பந்தப்பட்ட புறப்பாட
நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதில் கல்வி அமைச்சின் கீழுள்ள அனைத்து
கல்விக் கூடங்களின் ஒத்துழைப்பும் நாடப்படும்.

மாணவர்களை உட்படுத்திய குறுக்கோட்டம், அணிவகுப்பு, விளையாட்டு
நிகழ்வுகள், முகாமிடம் நடவடிக்கை, பள்ளிக்கு வெளியே
மேற்கொள்ளப்படும் கற்றல்,கற்பித்தல் ஆகியவை தற்காலிகமாக
நிறுத்தி வைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட புறப்பாட நடவடிக்கைகளாகும்
என்று கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை உட்படுத்திய
அனைத்து புறப்பாட நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதில் அமைச்சின்
கீழுள்ள அனைத்து கல்விக்கூடங்களும் ஒத்துழைப்பு நல்கும் என நாங்கள்
எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் சுகாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பில்
கல்வி அமைச்சின் அனைத்து நிலையிலான பணியாளர்களும் காட்டி வரும்
அக்கறையை நாங்கள் பெரிதும் போற்றுகிறோம் என்று அமைச்சர் தனது
டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பம் நிறைந்த நடப்புச் சூழலின் அரசாங்க கல்விக்கூடங்களை சேர்ந்த
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமலாக்கத் தரப்பினர் விளையாட்டு
ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவதாக கல்வியமைச்சு முன்னதாக
கூறியிருந்தது.

சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பள்ளிச் சீருடை
அணியும் மாணவர்கள் டை எனப்படும் கழுத்துப் பட்டை அணிவதிலிருந்து
விலக்களிக்கப்படுவதாகவும் அது தெரிவித்திருந்தது.


Pengarang :