ECONOMYMEDIA STATEMENT

ஒற்றுமை அரசாங்கம் தவணை முடியும் வரை ஆட்சியில் நிலைத்திருக்கும்- பிரதமர் நம்பிக்கை 

கோலாலம்பூர், மே 5- நாட்டை தற்போது வழிநடத்தி வரும் ஒற்றுமை அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தல் வரை நாட்டை வழி நடத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை நமது அரசாங்கம் முழுமையாக ஆட்சியில் இருக்கும். இதனை நான் முழுமையாக நம்புகிறேன். இல்லாவிட்டால் இந்த இந்த வார்த்தையை நான் வெளியிட மாட்டேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தாம் புதிய பிரதமராக பதவியேற்பதை ஆதரிக்கும் சத்தியபிரமாண வாக்குமூலங்கள் தம்மிடம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறியுள்ளது  தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.

லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சாவுக்கு உண்மையில் ஆதரவு இருக்கும் பட்சத்தில் அதன் தொடர்பான தீர்மானத்தை அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

அவரிடம் சத்திய பிரமாண வாக்குமூலங்கள் இருக்கும் பட்சத்தில் நாடாளுமன்றம் கூடும் போது அதனைத் தாக்கல் செய்யலாம் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நோன்புக்கு முன்னர், ஹரிராயாவுக்கு முன்னர், ஹாஜிப் பெருநாளுக்கு முன்னர்  தைப்பூசத்திற்கு முன்னர், சீனப்புத்தாண்டிற்கு முன்னர் என வார அடிப்படையில் ஹம்சா புலம்பிக் கொண்டிருக்கிறார் என்றார் அவர்.

இங்குள்ள ஜாலான் விஸ்மா புத்ராவில் மலேசிய செம்பிறைச் சங்கத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சங்கத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது சீனாவில் தலைமறைவாக இருக்கும் ஜோ லோ என அழைக்கப்படும் லோ தெக் ஜோவை நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வினவப்பட்ட போது, அந்நபரை நாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்று அன்வார் பதிலளித்தார்.


Pengarang :