EKSKLUSIFMEDIA STATEMENT

10,000 வருகையாளர்களுடன் புதிய வரலாறு படைத்த சபாக் பெர்ணம் நோன்புப் பெருநாள் உபசரிப்பு

சபாக் பெர்ணம், மே 13- இங்கு நேற்று நடைபெற்ற சபாக் பெர்ணம் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வருகையாளர்களுடன் புதிய வரலாறு படைத்துள்ளது.

இவ்வாண்டிற்கான நோன்புப் பெருநாள் உபசரிப்பு தொடரில் ஏழாவது நிகழ்வான இது, அதிமானோரின் பங்கேற்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற உபசரிப்பாகவும் விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வட்டார மக்கள் காலை 7.00 மணி முதல் இங்கு கூடி இரு மாடுகள் மற்றும் எண்ணற்ற கோழிகளை அறுத்து சமையலுக்கான ஏற்பாடுகளை செய்தது வழக்கத்திற்கு மாறான வித்தியாச நிகழ்வாகவும் திகழ்கிறது என்று அவர் சொன்னார்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் மாநிலத்திலுள்ள அனைத்து சமூக மற்றும் மாநிலத் தலைவர்களும் கலந்து கொண்டனர். சமூகத்தில் நல்வாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதில் இத்தகைய உணர்வு பெரிதும் துணை புரிகிறது என்றார் அவர்.

சபாக் பெர்ணம் டத்தாரான் தானா லேசேன் பாரிட் பாருவில் நேற்றிரவு நடைபெற்ற மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுங்கை ஆயர் தாவார் சட்டமன்றத் தொகுதியிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்த பொது உபசரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ததாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மாநிலத்தின் அனைத்து ஒன்பது மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. 

இந்த பொது உபசரிப்பின் இறுதி நிகழ்வு நாளை 14ஆம் தேதி ஸ்ரீ கோம்பாக் ஆப்டவுன் வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்கவுள்ளார்.


Pengarang :