ECONOMYMEDIA STATEMENT

புலிக்குப் பலியானதாக கூறப்பட்ட பூர்வக்குடி ஆடவர் சடலம் ஆற்றில் மீட்பு

குவா மூசாங், மே 13- மீன் பிடிக்கச் சென்ற போது காணாமல் போன பூர்வக்குடி ஆடவர் புலிக்குப் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவரின் சடலம் கோல சுங்கை துங்கால் ஆற்றில் நேற்று முன்தினம் கண்டு பிடிக்கப்பட்டது.

ஹலிம் ஹசின் (வயது 27) என்ற அந்த இளைஞரின் சடலம் அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மரக்கட்டைகளுக்கு இடையில் சிக்கிய நிலையில் நேற்று மாலை 5.10 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.

அந்த ஆடவர் மீன் பிடிக்கும் போது நீரில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படும் வேளையில்  மேல் சட்டை மட்டும் அணிந்த நிலையில் அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டது என அவர் சொன்னார்.

இருள் சூழும் நிலையில் அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் மீட்புப் பணிகளை  மேற்கொள்வது பாதுகாப்பற்றது என்பதால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் அவ்வாடவரின் சடலம் மீட்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.

சவப்பரிசோதனைக்காக அவரது சடலம்  குவா மூசாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், இந்த தேடி மீட்கும் நடவடிக்கையில் பெர்ஹிலித்தான் எனப்படும் தேசிய பூங்கா மற்றும் வன விலங்கு பாதுகாப்பு இலாகாவின் எட்டு உறுப்பினர்கள், பொது தற்காப்பு படையின் இரு உறுப்பினர்கள் ஆகியோருடன் காவல் துறையினரும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

சுங்கை ஆரிங் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக அந்த ஆடவர் தன் உறவுக்கார சிறுவனுடன் சென்ற போது காணாமல் போனார். அவரைப் புலி அடித்துக் கொன்றிருக்கலாம் என தொடக்கத்தில் சந்தேகிக்கப்பட்டது.


Pengarang :