ECONOMYMEDIA STATEMENT

செலாயாங்கிலுள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்- அமிருடின் நம்பிக்கை

கோம்பாக், மே 21- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் செலாயாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்றங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

செலாயாங் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் பொது மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டது இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக விளங்குவதாக அவர் சொன்னார்.

செலாயாங் மற்றும் தாமான் டெம்ப்ளர் தொகுதிக்கு வந்த போது கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் அதிகமானோர் வருகை புரிந்துள்ளதை காண முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நமக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கான அறிகுறியாகவும் அடையாளமாகவும் இது விளங்குவதோடு செலாயாங் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள மூன்று சட்டமன்றங்களையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் இது ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள டத்தாரான் இல்மு பண்டார் பாரு செலாயாங்கில் நேற்று நடைபெற்ற செலாயாங் நாடாளுமன்றம் மற்றும் தாமான் டெம்ப்ளர் சட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

இந்த உபசரிப்பில் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் மற்றும் தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செலாயாங் நாடாளுமன்றத் தொகுதியில் தாமான் டெம்ப்ளர், ரவாங் மற்றும் குவாங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 

பல்லின மக்களிடையே காணப்படும் அணுக்கமான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் காரணமாக இத்தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் அமிருடின் சொன்னார்.


Pengarang :