ECONOMYMEDIA STATEMENT

நெஞ்சில்  கத்தியால்  குத்தப்பட்டதால் உணவகப் பணியாளர் மரணம்- சவப்பரிசோதனையில் அம்பலம்

ஷா ஆலம், மே 27-   கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்கு நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டதே காரணம் என்பது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

சபாங் பெர்ணம், ஜாலான் சுங்கை லீமாவில் கடந்த வெள்ளியன்று கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட உணவகப் பணியாளரான அப்பெண் நெஞ்சில் ஏற்பட்ட கத்திக் குத்து காயத்தினால் உயிரிழந்தார் என்று சபாக் பெர்ணம் போலீஸ் தலைவர்  சூப்ரிண்டெண்டன் அகுஸ் சலிம் கூறினார். 

சவப்பரிசோதனைக்குப் பின்னர் அந்த பெண்ணின் சடலம் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு சுங்கை பெசார், கம்போங் நெலாயான் மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கூடுதல் விசாரணை தேவைப்படும் பட்சத்தில் சந்தேகப் பேர்வழிக்கு எதிரான தடுப்புக் காவல் ஆணையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மனு செய்யப்படும் என்றார் அவர்.

அந்த கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரின் உடலைத் தீயிட்டு கொளுத்திய சந்தேகத்தின் பேரில் அவரின் காதலனைப் போலீசார் கைது செய்தனர்.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவின் மூலம் உண்டான கர்ப்பத்தை கலைப்பதற்கு அந்த 21 வயதுப் பெண் மறுத்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரின் காதலன் அவரை கொலை செய்ததாக நம்பப்படுகிறது.


Pengarang :