ECONOMYMEDIA STATEMENT

கூடுதல் கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு- கல்வியமைச்சு பரிசீலனை

நிபோங் திபால், மே 27- கூடுதல் கல்வித் தகுதியை கொண்ட ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து கல்வியமைச்சு பரிசீலித்து வருகிறது.

இந்த கோரிக்கை மீது கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதன் அமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார். உயர்நெறியும் ஆசிரியர் சேவை தரமும் கல்வி அமைச்சின் முக்கிய இலக்காக இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் தகுதி அடிப்படையில் இந்த கோரிக்கை ஏற்புடையதாக உள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த விவகாரம் மீது நாங்கள் தீவிர கவனம் செலுத்தும் அதேவேளையில் நாட்டில் பொருளாதார நிலை மீட்சி கண்டவுடன் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு காணும் என்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பையும் கருத்தில் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

இங்குள்ள சுங்கை டூரியில் செபராங் பிறை செலாத்தான் மாவட்ட நிலையிலான கார்னிவெல் கித்தா மடாணி நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம்  இதனைத் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வரும் உயர் கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட கோரிக்கை தொடர்பில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தற்போது இளங்கலை பட்டமும் முனைவர் (பிஎச்டி) பட்டம் பெற்ற ஆசிரியர்களின் சம்பளம் ஒரே மாதிரியாக உள்ளதாக தேசிய பேராசிரியர் மன்றத்தின் கல்வி மற்றும் மனித மூலதனப் பிரிவின் செயலாளர் டாக்டர் அனுவார் அகமது கூறியிருந்தார்.


Pengarang :