ECONOMYMEDIA STATEMENT

இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கும் அந்நியத் தொழிலாளர் விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும்-  அமைச்சர் சிவகுமார் 

புத்ரா ஜெயா மே 29- இந்நாட்டில் இந்திய பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் எதிர்நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு  தீர்வு காணும் வகையில் இந்த விவகாரம் அமைச்சரவை கூட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று உறுதியளித்தார்.

குறிப்பாக இந்தியத் தொழில் துறைகளான முடிதிருத்தும் நிலையங்கள், ,நகைக் கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளுக்கான அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண மனிதவள அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போதைக்கு இந்த மூன்று தொழில் துறைக்கான அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. இதனை மீண்டும் திறந்து விட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு சம்பந்தப்பட்ட உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் ஏற்கனவே  பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன்.

இந்த மூன்று துறைகளுக்கும் எவ்வளவு தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையும் பேசி முடிவெடுப்போம். அதன் பின்னர்  அமைச்சரவை ஒப்புதலுக்காக இந்த விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த மூன்று துறைகளுக்கும் எவ்வளவு சீக்கிரத்தில் தீர்வு காண முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தீர்வு காண போராடி கொண்டிருக்கிறேன் என்றார் அவர்.

சன்வே மெந்தாரி கண்ணா முடித்திருத்தும் அகாடமியைச் சேர்ந்த கண்ணா மற்றும் முரளி ஆகியோர் இன்று மனிதவள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாட்டில் முடிதிருத்தும் நிலையங்கள் பெரும் அளவில் அந்நியத் தொழிலாளர்களை பெரிதும் நம்பியிருப்பதால் உதவி புரியும் படி மனிதவள அமைச்சரை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.


Pengarang :