SELANGOR

மாநிலத்தில் நேற்று தொடங்கிய மாபெரும் சாலை சீரமைப்புப் பணி ஜூலை இறுதியில் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஜூன் 2- சிலாங்கூரிலுள்ள ஒன்பது மாவட்டங்களில் 94.9
கிலோ மீட்டரை உள்ளடக்கிய பகுதிகளில் பழுதடைந்த சாலைகளைச்
செப்பனிடும் பணி நேற்று தொடங்கியது. மிகப்பெரிய அளவிலான இந்த
சீரமைப்புப் பணி வரும் ஜூலை மாதம் இறுதியில் முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மெகா சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பெட்டாலிங் மாவட்டத்தில் 66
சாலைகளும் கிள்ளான் மாவட்டத்தில் 39 சாலைகளும் கோம்பாக்கில் 29
சாலைகளும் உலு லங்காட்டில் 27 சாலைகளும் சிப்பாங்கில் 19
சாலைகளும் சபாக் பெர்ணமில் 17 சாலைகளும் கோல லங்காட்டில் 16
சாலைகளும் கோல சிலாங்கூரில் 11 சாலைகளும் உலு சிலாங்கூரில் 8
சாலைகளும் செப்பனிப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.

மாநிலத்திலுள்ள சாலைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யும்
நோக்கில் மாநில அரசு மேற்கொண்டு வரும் இந்த மாபெரும் சீரமைப்புப்
பணிக்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம்
வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில்
விபத்துகளின் எண்ணிக்கையும் குறைக்க முடியும் என்று அவர்
தெரிவித்தார்.

மாநில அரசின் துணை நிறுவனமான இன்ப்ராசெல் சென். பெர்ஹாட்டின்
டிவிட்டர் அல்லது மாநில சாலை பராமரிப்பு செயலி மூலம் பொது
மக்களிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில் சீரமைப்பு பணிகள்
மேற்கொள்ளப்படவுள்ள சாலைகள் அடையாளம் காணப்பட்டதாக அவர்
மேலும் சொன்னார்.

இங்குள்ள செக்சன் 22, பெர்சியாரான் ஜூப்ளி பேராக்கில் மாநில அரசின்
இந்த மெகா சாலை செப்பனிடும் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் தடங்களை சீரமைப்பதில் மாநில அரசு கவனம்
செலுத்துமா என நிருபர்கள் வினவிய போது, அது குறித்து
பரிசீலிக்கப்படும் என்றும் எனினும், தற்போதைக்கு சாலை பராமரிப்பில்
மட்டுமே கவனம் செலுத்தப்படும் என்றும் அமிருடின் பதிலளித்தார்.


Pengarang :