மாநில அரசின் துரித நடவடிக்கையால் கிள்ளானில் வெள்ளம் கட்டுப்படுத்தப்பட்டது- மந்திரி புசார்

ஷா ஆலம், ஜூன் 5- கிள்ளான் வட்டாரத்தில் நேற்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் மாநில அரசின் துரித நடவடிக்கையால் விரைவாக கட்டுப்படுத்தப் பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீரை இறைத்து வெளியேற்றும் பணி விரைவாக மேற்கொள்ளப் பட்டதால் நேற்று மாலைக்குள் நீர் வடிந்து நிலைமை சீரடைந்தது என்று அவர் சொன்னார்.

இந்த திடீர் வெள்ளத்தில் கிள்ளான் மாவட்டம் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைவான குடும்பங்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்ட வேளையில் வெள்ள நீரும் விரைவாக வடிந்து விட்டது என்றார் அவர்.

ஷா ஆலம் அரங்கில் நேற்றிரவு கார்னிவெல் ஜோம் ஹேபோ நிகழ்வை முடித்து வைக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு தொடங்கி பெய்த கனத்த மழையின் காரணமாக கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜா, செத்தியா ஆலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :