MEDIA STATEMENT

கொள்ளைக் கும்பலுக்கு எதிரான போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் இருவர் பலி

கோலாலம்பூர், ஜூன் 8- வீடு புகுந்து கொள்ளையிடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க இருவர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர். இச்சம்பவம் தலைநகர் செராஸ், தாமான் சுப்ரீமில் உள் ஒரு வீட்டில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.

அந்நியர்கள் என சந்தேகிக்கப்படும் அக்கொள்ளையர்கள் பாராங் கத்தியால்  தாக்க முற்பட்ட போது வேறு வழியின்றி போலீசார் தற்காப்புக்காக அவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

இன்று விடியற்காலை 3.30 மணியளவில் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்த கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்த் துறையை (டி9) சேர்ந்த உறுப்பினர்கள் நான்கு சந்தேக நபர்களின் நடமாட்டத்தைக் கண்டதாக அவர் சொன்னார்.

போலீசாரின் வருகையை உணர்ந்த கொள்ளையர்களில் இருவர் போலி எண் பட்டை பொருத்தப்பட்டதாக நம்பப்படும் காரில் ஏறி அங்கிருந்து தப்பியதாக அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் சுட்டுக கொல்லப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாராங் கத்தி, இரும்பு வெட்டும் கருவி உள்பட வீட்டை உடைக்க பயன்படும் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தின் போது தப்பியோடிய இரு சந்தேகப் பேர்வழிகளைத் கண்டு பிடிக்கும் முயற்சியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :