2022 எஸ்.பி.எம். தேர்வு- 10,109 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் “ஏ“ பெற்றனர்

புத்ராஜெயா, ஜூன் 8- கடந்த 2022ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மொத்தம் 10,109 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ மற்றும் ஏ- நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் மாணவர்கள் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளதாக கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ பகாருடின் கசாலி கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் 4.86ஆக இருந்த ஜி.பி.என். எனப்படும் மொத்த சராசரி கிரேட் மதிப்பெண் எண்ணிக்கை கடந்தாண்டில் 4.74 ஆக மேம்பாடு கண்டுள்ளது இச்சிறப்பான அடைவு நிலைக்கான சான்றாக விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

குறைவான ஜி.பி.என். எண்ணிக்கை சிறப்பான அடைவு நிலையை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டில் 373,974 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வை எழுதினர். அவர்களில் 75,322 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் குறைந்த பட்சம் சி மதிப்பெண்களுடன் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பகாருடின் தெரிவித்தார்.

மொத்தம் 342,742 மாணவர்கள் அல்லது 91.6 விழுக்காட்டினர் தேர்வு சான்றிதழைப் பெறுவதற்கான தகுதியைப் கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2021ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது என்று அவர் சொன்னார்.

சான்றிதழ் நிபந்தனை முறை கடந்த 2013ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் பெறுவதற்கான தகுதியைப் பெறுவது இதுவே முதன் முறையாகும் எனவும் அவர் கூறினார்.


Pengarang :