SELANGOR

சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பங்கேற்றவர்களில் 68 விழுக்காட்டினருக்கு நீரிழிவு, கொலேஸ்ட்ரோல் பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 9- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்தாண்டு
நடத்தப்பட்ட சிலாங்கூர் சாரிங் எனும் இலவச மருத்துவப் பரிசோதனைத்
திட்டத்தில் பங்கேற்ற 22,767 பேரில் சுமார் 68 விழுக்காட்டினர் நீரிழிவு
அல்லது அதிக கொலேஸ்ட்ரோல் அல்லது இவ்விரு நோய்களால்
பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பார்வை மங்கலாகத் தெரிவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை
குறைவது, காயம் எளிதில் குணமடையாதது ஆகியவை நீரிழிவு
நோய்க்கான அறிகுறியாக விளங்குகிறது என்று பொது சுகாதாரத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தனது
பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அடிக்கடி தாகம் எடுப்பது, உடல் சோர்வு மற்றும் பசி
போன்றவையும் இந்நோய்க்கான இதர அறிகுறிகளாகும் என அதில்
கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்ட சிலாங்கூர் சாரிங் இலவச
மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்ற 22,767 பேரில் 68.36
விழுக்காட்டினர் பலன் பெற்றுள்ளதாக டாக்டர் சித்தி மரியா கடந்த மே
மாதம் 31ஆம் தேதி கூறியிருந்தார்.

மாநில மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக மாநில அரசு
அமல்படுத்திய ஆறு மருத்துவ உதவித் திட்டங்களில் இந்த சிலாங்கூர்
சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டமும் ஒன்றாகும்.

நோய்ப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடல்
பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக்
கடைபிடிக்காதவர்களை இலக்காக கொண்டு 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது.


Pengarang :