ECONOMYMEDIA STATEMENT

10,000 பேரின் அடையாள பத்திரப் பிரச்சனைக்கு ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண உள்துறை அமைச்சர் உறுதி- குலசேகரன்

ஷா ஆலம், ஜூன் 11- பிறப்பு பத்திரம், மைகார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் தொடர்பான சுமார் 10,000 விண்ணப்பங்களுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கூறினார்.

இம்மாத இறுதிக்குள் கூடுமானவரை 9,000 விண்ணப்பங்கள் வரை  அங்கீகரிக்கப் படுவதற்குரிய சாத்தியம் உள்ளது என அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் இஸ்மாயில் நசுத்தியோன் தெரிவித்துள்ளார் என அவர் சொன்னார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சருடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அடுத்த ஆறு மாத காலத்தில் இந்த அடையாள ஆவணப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான வாக்குறுதியை அமைச்சர் வழங்கினார் என குலசேகரன் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற “மலேசியா மடாணி- இந்திய அரசியல் முன்நகர்வு“ எனும் ஆய்வரங்கில் பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் குலசேகரன் இதனைத் தெரிவித்தார்.

இந்திய அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மலேசிய இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆய்வரங்கில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.

அடையாள ஆவணப் பிரச்சனை இந்தியர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் மத்தியிலும் நிலவுவதாக குறிப்பிட்ட குலசேகரன்,  இந்த ஐந்தாண்டு காலத் தவணையில் இவ்விவகாரத்திற்கு முழுமையான தீர்வு காண்பதில் ஒற்றுமை அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது என்றார்.


Pengarang :