ECONOMY

ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் அரசியல்வாதிகள், அந்நிய ஏஜெண்டுகள் தலையிடக்கூடாது- அன்வார் வலியுறுத்து

பட்டர்வொர்த் ஜூன் 18- ராணுவ தளவாடங்கள் வாங்கும் விஷயத்தில் அரசியல்வாதிகளும் அந்நிய ஏஜெண்டுகளும் தலையிடக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தி உள்ளார்.

விமானங்கள், கப்பல்கள், ஆயுதங்கள் மற்றும் இதர ராணுவம் சார்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டு, நிதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் போது சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அமைச்சு நேரடி பேச்சுவார்த்தை. நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்கு பட்டர் வெர்த்தில் உள்ள அரச மலேசிய ஆகாய படைத்தளத்தில் ஆகாயப்படை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய தற்காப்பு கொள்கை போதுமான அளவு தயார் நிலைக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய  அவர், தற்போது பழைய தளவாடங்களே இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவதால் அண்டை நாடுகளின் அளவுக்கு நமது தளவாடங்களின் தரம் உயரவில்லை என்றார்.

ராணுவ தளவாடங்கள் வாங்கும் உரிமையை ஆயுதப்படையிடம் ஒப்படைப்பதில்லை என்ற முந்தைய அரசின் முடிவினால் மலேசிய தற்காப்புக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. ஆயுதங்களை வாங்கும் விவகாரத்தில் அதிக கமிஷன் தொகை சம்பந்தப் பட்டுள்ளதால் ஏகப்பட்ட அளவுக்கு வீண் விரயம் ஏற்பட்டது என்றார் அவர்.

ராணுவ வீரர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு புதிய வீடுகளை கட்டுவது மற்றும் நடப்பில் உள்ள வீடுகளை சீரமைப்பது போன்ற பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் அன்வார் சொன்னார்.


Pengarang :