MEDIA STATEMENT

செந்தோசா தொகுதியில் குணராஜ் மீண்டும் போட்டியிட வேண்டும்- தொகுதி குடியிருப்பாளர் சங்கம் வேண்டுகோள்

கிள்ளான், ஜூன் 18- சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு விரைவில் நடைபெற இருக்கும்  தேர்தலில் செந்தோசா தொகுதியின் நடப்பு  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ்க்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்  என்று தாமான் செந்தோசா குடியிருப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய வாக்காளர்கள் அதிகம் உள்ள ஒரே தொகுதியான செந்தோசாவில்  2018 பொதுத் தேர்தலில் தொகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று 86% வாக்காளர்களால் குணராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சங்கத்தின் தலைவர் ஞானேஸ்வரன் கூறினார்.

தொகுதி மக்களின் கல்வி, சமூக நலன், கலை-பண்பாட்டு வளர்ச்சி, பொது சுகாதாரம், சுற்றுச் சூழல், வடிகால் கட்டமைப்பு, சமய நல்லிணக்கம், சமூக ஒருங்கிணைப்பு என எல்லாத் தளங்களிலும் அயராமல் பாடுபட்டுவரும் அவர்,  அனைத்து தரப்பு மக்களின் அபிமானத்தைப் பெற்ற மக்கள் பிரதிநிதியாக திகழ்பவர் குணராஜ்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் இந்தியர் சிறப்பு அதிகாரியாக இருப்பதால், தொகுதி எல்லையைக் கடந்து மாநில  இந்திய சமுதாயத்திற்கு அவர் குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக, பிகேஆர் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து மக்களுக்குமான சேவகராக விளங்கி வருகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, செந்தோசா தொகுதியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருவதுடன், மாநிலத்திலேயே முன் உதாரண மக்கள் பிரதிநிதியாக செயல்படும் குணராஜ் விரைவில் நடைபெற இருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில்  மீண்டும் செந்தோசா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அனைத்து மக்களும் விரும்புவதாக  ஞானேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Pengarang :