MEDIA STATEMENTNATIONAL

சமூக ஊடகங்களில் பேரரசருக்கு எதிராக அவதூறு பரப்பிய கர்ப்பிணி பெண் கைது 

ஜார்ஜ் டவுன் ஜூன் 18 – டான்ஸ்ரீ லிம் கிட் சியாங்கிற்கு விருது வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவை நிந்திக்கும் வகையில் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக ஆறு மாத கர்ப்பிணியான பெண்மணி ஒருவர் விசாரணைக்காக போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 13ஆம் தேதி செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையக வளாகத்தில் 32 வயதுடைய அந்த பெண் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ்  கோக் சின் கூறினார்.

பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கடந்த ஜூன் 7ஆம் தேதி தனது தரப்பு புகாரை பெற்றதாக அவர் சொன்னார்.

நிந்தனைக்குரிய கருத்துக்களை பதிவேற்றம் செய்தது தொடர்பான விசாரணைக்காக அந்தப் பெண்ணை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணை பிரிவு இம்மாதம் 13ஆம் தேதி கைது செய்தது என்று அவர் சொன்னார்.

அந்தப் பெண் மாமன்னரை நிந்திக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதோடு அல்லாமல் 1969 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி நிகழ்ந்த கலவரத்திற்கும் லிம் கிட் சியாங் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி இருந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்து விசாரணைக்காக மடிக்கணினி, கைபேசி, சிம் கார்டு உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்

தாம் கர்ப்பிணியாக இருப்பதாக பெண் கூறியதைத் தொடர்ந்து அவரை போலீசார் போலீஸ் ஜாமீனில் அன்றைய தினமே விடுவித்ததாகவும் அவர் கூறினார்.

இந்த புகார் தொடர்பாக 1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1)வது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின்  233 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்  சொன்னார்.


Pengarang :