EKSKLUSIFMEDIA STATEMENT

ஐந்தாண்டு கால ஆட்சியின் செயல்திறனை விளக்கும் அடைவு நிலை அறிக்கையை மாநில அரசு வெளியிடும

ஷா ஆலம், ஜூன் 24- மாநில அரசின் கடந்த  ஐந்தாண்டு ஆட்சியின் செயல் திறன் மற்றும் சாதனைகளை மக்கள் எளிதாக மதிப்பிடுவதற்கு ஏதுவாக 2018-2023 சிலாங்கூர் அரசின் அடைவு நிலை அறிக்கை வெளியிடப்படும்.

முதன் முறையாக வெளியிடப்படும் இந்த அடைவு நிலை அறிக்கையில் அனைத்துப் பொருளாதாரத் துறைகள் மற்றும் சமூக உதவித் திட்டங்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக இடம் பெற்றிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த அடைவு நிலை அறிக்கையில் உள்ளடங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மாநில மக்கள் நடப்பு அரசாங்கத்தை மீண்டும் தேர்ந்தெடுப்பர் எனத் தாம் நம்புவதாக சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அவர் சொன்னார்.

சில வேளைகளில் மக்களுக்கு நாம் அமல்படுத்திய திட்டங்கள் தெரியாமலே போய்விடுகிறது. மக்கள் புரிந்து கொள்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் ஏதுவாக அவற்றை தொகுப்பாக வெளியிடவுள்ளோம். அந்த அறிக்கையை தாம் தாக்கல் செய்யும் பட்சத்தில் நம்மை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்குரிய தீவிர முனைப்பு மக்களுக்கு ஏற்படும் என்றார் அவர்.

மாநில அரசுத் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாநில அரசு ஊழியர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாதிரி அடைவு நிலை அறிக்கை ஒன்றை அமிருடின் வெளியிட்டார்.


Pengarang :