ECONOMY

பி.பி.ஆர். லெம்பா சுபாங் குடியிருப்பு பகுதியிலுள்ள சாலைகள் வெ.100,000 செலவில் சீரமைப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24- லெம்பா சுபாங் 1 மற்றும் 2இல் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதி (பி.பி.ஆர்.) வளாகத்திலுள்ள சாலைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு 100,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த சாலை மறுசீரமைப்புப் பணிகள் முற்றுப் பெற்றதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சௌகர்யமான முறையில் சாலையைப் பயன்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாக ஸ்ரீ செத்தியா தொகுதி சட்டமன்றத்தின் நடப்பு உறுப்பினரான ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

புரோஜெக்ட் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சீரமைப்பு பணியின் மூலம் அந்த மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றியுள்ள சாலைகள் செப்பனிடப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அப்பகுதியிலுள்ள  சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டதால் வாகனங்கள் அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இந்த சீரமைப்பு பணியின் வழி அங்குள்ள மக்கள் சீரானப் பயணத்தை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார் அவர்.

இங்குள்ள லெம்பா சுபாங் 1 பி.பி.ஆர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு ஊராட்சி மன்ற துணையமைச்சர்  அக்மால் நசாருல்லா முகமது நாசீருடன் வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :