ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விபத்து, பஸ் பழுது காரணமாக பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், ஜூன் 30- விபத்துகள் மற்றும் பஸ் பழுது காரணமாக நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று காலை வாகனங்கள் மெதுவாக நகர்வதைக் காண முடிந்தது. எனினும் மாலையில் நிலைமை சீரடைந்து சுமூகமான போக்குவரத்து காணப்பட்டது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் 155.3வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்து காரணமாக பினாங்கு மாநிலத்தின் ஜாவி முதல் காசியா ரிவர் வரையிலான பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பிளாஸ் நிறுவன பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்த விபத்து காரணமாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகன நெரிசல் காணப்பட்டது. எனினும் பின்னர் நிலைமை சீரடையத் தொடங்கியது என்று அவர் தெரிவித்தார்.

பிளாஸ் நெடுஞ்சாலையின் 264.5வது கிலோ மீட்டரின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் விபத்து ஏற்பட்ட வேளையில் 263.4வது கிலோ மீட்டரின் வடக்கு தடத்தில் பஸ் ஒன்று பழுதடைந்தது. இதன் காரணமாக சாலையின் இடது தடத்தில் போக்குவரத்து முழுமையாகத் தடை பட்டது என்றார் அவர்.

இது தவிர, கோல கங்சாரிலிருந்து சுரங்கப்பாதை நோக்கிச் செல்லும் தடத்தின் 258.7வது கிலோ மீட்டரில் ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இதனிடையே,  காராக் நெடுஞ்சாலை, கிழக்குக் கரை நெடுஞ்சாலை 1 மற்றும் கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2 ஆகியவற்றில் போக்குவரத்து சீராக உள்ளதாக மலேசிய  நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் சொன்னார்.


Pengarang :