ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறு, நடுத்தர வணிகர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து உதவ வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 30- சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடனைத் திரும்பச் செலுத்தும் விவகாரத்தில் வங்கிகள் தொடர்ந்து உதவி வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பி.கே.எஸ். எனப்படும் அத்தரப்பினர் பெற்றுள்ள கடனை மறுசீரமைப்பு செய்வது மற்றும் அட்டவணை இடுவது போன்ற உதவிகளை வங்கிகள் வழங்க வேண்டும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதே சமயம், கடனைத் திரும்பச் செலுத்த இயலாதவர்கள் இலவச ஆலோசகர் சேவையைப் பெறுவதற்கும் ஏ.கே.பி.கே. எனப்படும் கடன் மேலாண்மை மற்றும் ஆலோசக நிறுவனத்தின் வாயிலாக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு தேவையான உதவிகள் நல்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

மக்களுக்கு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினருக்கும் உதவுவதில் வங்கிகள் காட்டி வரும் கடப்பாடு குறித்து நான் மனநிறைவு கொள்கிறேன் என நிதியமைச்சருமான அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டில் குறிப்பாக, அந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் இருக்கும் கடனாளிகளுக்கு உதவுவதில் வங்கிகள் முக்கியப் பங்கினை ஆற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் நாட்டிலுள்ள வங்கித் துறையினருடன் கடந்த 28ஆம் தேதி சந்திப்பு நடத்தினார். நாட்டின் பொருளாதாரம் குறித்து அனைத்து தரப்பையும் சேர்ந்த மக்களிடம் கருத்துகளைப் பெறும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.


Pengarang :