ECONOMYMEDIA STATEMENT

விமர்சனங்களால் ஒற்றுமை அரசு துவண்டு விடாது- பொருளாதாரத்தை மீட்பதில் தொடர்ந்து முனைப்பு காட்டும்

அம்பாங் ஜெயா, ஜூலை 2- இடைவிடாத விமர்சனங்களை எதிர் கொண்ட போதிலும் ஒற்றுமை அரசு சிறிதும் சளைக்காது நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக தொடர்ந்து பாடுபடும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டில் பொருட்களின் விலை சிறிது உயர்வு கண்ட போதிலும் அவை அபரிமித உயர்வு காணாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பண வீக்கத்தை ஒற்றுமை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தி உள்ளதாக கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதோடு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக் குறைவான அளவு பணவீக்கத்தை பதிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதோடு மட்டுமின்றி, பத்து மாதங்களாக நீடித்து வந்த கோழி மற்றும் முட்டை பற்றாக்குறைப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளின்  போது அவ்விரு அத்தியாவசிய உணவுப் பொருள்களும்  சந்தையில் போதுமான அளவு இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள கம்போங் சுங்கை புசு சமூக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான ஹஜ்ஜூப் பெருநாள் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு கூறினார்.

வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பொருளாதாரத் திட்டம் மூலம் மாநில அரசு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான பல்வேறு ஆக்ககரமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :