NATIONAL

வாக்களிப்புத் தினம் ஆகஸ்டு 12ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது பொருத்தமானது- மந்திரி புசார் கருத்து

ஷா ஆலம், ஜூலை 6 – ஆறு மாநிலங்களுக்கான தேர்தலை ஏக
காலத்தில் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ஆகஸ்டு 12ஆம் தேதி
பொருத்தமானதும் நியாயமானதும் ஆகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

எதிர்வரும் ஜூலை 29ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்குப் பிரச்சாரம்
செய்யவதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அனைத்துக் கட்சிகளும்
பிரச்சாரம் செய்வதற்கும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்கும்
போதுமானதாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

சமூக ஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்த இக்காலக்கட்டத்தில் அரசியல்
கட்சிகள் தங்கள் கொள்கைகளை மக்களிடம் விளக்கவும் வாக்காளர்களைக்
கவரவும் போதுமான அவகாசத்தை இது வழங்கும் என அவர்
தெரிவித்தார்.

வழங்கப்பட்ட இந்த கால அவகாசத்தின் அடிப்படையில் அனைத்துக்
கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்குரிய தயார் நிலையில் உள்ளன.
மேலும், சனிக்கிழமை தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் வார
விடுமுறையைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக
கடமையை நிறைவேற்றுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு
ஆகிய ஆறு மாநிலங்களில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி தேர்தல்
நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் தேதி நிர்ணயித்துள்ளது.

இந்த ஆறு மாநிலங்களிம் இம்மாதம் 29ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல்
செய்யப்படும் வேளையில் தொடக்கக் கட்ட வாக்களிப்பு ஆகஸ்டு 8ஆம்
தேதி நடைபெறும்.


Pengarang :