ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் ஆட்சியை மாற்ற வேண்டிய அவசியமில்லை  மந்திரி புசார் ஆவேச தாக்கு

செய்திகள் -சு. சுப்பையா

பெ.ஜெயா.ஜூலை. 5-  சிலாங்கூர் மாநில ஆட்சியை மாற்றுவோம் என்று பெரிக்காத்தன் தலைவர்கள் கூறி வருகின்றனர். சிலாங்கூர் அரசு ஆட்சியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பக்கத்தான்  ஹரப்பான் ஆட்சியில்  கடந்த 3 தவணையாக  சிலாங்கூர் மக்கள் நன்கு கவனிக்க படுகிறார்கள் என்றார் அவர்..

அஸ்மின் ஆட்சியை விட நல்ல தரமான ஆட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய உற்பத்தியில்  மத்திய அரசுக்கு 25%  வருமானத்தை சிலாங்கூர் ஈட்டி தருகிறது. அவரது ஆட்சிக் காலத்தில் 23% மட்டும்தான். ஆக,  அவரை விட நமது ஆட்சி சிறந்தது என்பதை புள்ளிவிவரங்கள்  நிரூபிக்கின்றன என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி அஸ்மின் அலிக்கு பதிலடி கொடுத்தார்.

நேற்று பெட்டாலிங் ஜெயா வில் உள்ளா தாமான் மேடான் சட்டமன்ற தொகுதியின் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயந்திரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து தாமான் மேடானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.

இந்த தேர்தல் இயந்திர தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் நீதிக் கட்சியின் தேசியத் துணைத் தலைவரும் நாட்டின் பொருளாதார துறை அமைச்சருமான ரபிஸி ராம்லியும் கலந்து கொண்டார். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்காத்தான் ஆதரவாளர்கள் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டனர்.

அடுத்து நடைபெறும் மாநில தேர்தல் நமது எதிர்காலத்தை உறுதி செய்யும் முக்கியத்துவம்  வாய்ந்த தேர்தல்.  நமது திட்டங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. முழுமை பெற அடுத்த 5 ஆண்டுகள் நமக்கு தேவைப்படுகிறது.

இதனால் நாம் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேற இத்தேர்தலில் நமது வெற்றி மிகவும் இன்றியமையாதது.  நம்பிக்கை கூட்டணியின் ஆட்சியை நாம் நின்று நிலைக்க ஆவன செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் அநாகரிகமான முறையில் நடக்கும் அஸ்மின் , நமது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்ன செய்தாலும், அவரை  அவதூறாக பேசி வருகிறார்.  டத்தோ ஸ்ரீ அன்வார் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சென்றாலும் அதனை அவதூறாக பேசுகிறார்.  ”அஸ்மின் அலி, உனக்கு என்ன வேண்டும்” ? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.  அஸ்மின் அலி, டத்தோ ஸ்ரீ அன்வாரை திட்டுவதே வேலையாக செய்து கொண்டிருக்கிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அஸ்மின் அலி ஆட்சி காலத்தில் கோழியில்லை, முட்டையில்லை. நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை உணவே தட்டுப் பாடு நிலவும் அளவுக்கு ஆட்சி நடத்தியது பெரிக்கத்தான். இன்று அஸ்மின் அலி ஆட்சியை விட சிலாங்கூர் சிறப்பாக ஆட்சி செய்யப்படுகிறது. சிலாங்கூர் மக்கள் பிறந்தது முதல் இறப்பு வரை மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தரப்படுகிறது.

அஸ்மின் காலத்தில் மாநிலத்திற்குள் 6 அல்லது 7 பில்லியன் ரிங்கிட் தான் முதலீடு கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று சிலாங்கூரில் ஆண்டு ஒன்றுக்கு 16 அல்லது 17 பில்லியன் ரிங்கிட் முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளன.

சிலாங்கூர் மக்கள் அனைவருக்கும் இலவச காப்புறுதி திட்டம் வழங்கப்படுகிறது. இதே போல் 47 திட்டங்கள் சிலாங்கூர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிலாங்கூர் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று இன, மத வாத பிரச்சனைகளை பெரிக்காத்தான் எழுப்பி வருகிறது. சிலாங்கூர் மக்கள் 15 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். பெரிக்காத்தானின் இன, மத வாத விசம பிரச்சாரம் இனியும் எடுபடாது என்று பலத்த கரகோசத்திக்கு இடையே கூறினார்.

அஸ்மின் அலி காலத்தில் சிலாங்கூர் மக்களுக்கு எவ்வளவு செலவு செய்தார், நாம் எவ்வளவு செலவு செய்தோம் என்ற புள்ளி விவரம் விரைவில் அம்பலப்படுத்துவேன் என்று பலத்த கைதட்டலுக்கு இடையே கூறினார்.

அஸ்மின் காலத்தில் நிலவிய குடிநீர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு புதிய அரசாங்கத்தால்  கொண்டு வரப் பட்டு விட்டது.  குடிநீர் பிரச்னைக்கு  நாம் முழுமையான  தீர்வு காண்பதை  உறுதி செய்துள்ளோம்.

அஸ்மினை விட நாம் சிறப்பாக சேவையாற்றியுள்ளோம். நமது சேவை தொடர வேண்டும். சிலாங்கூரில் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று கூறி பலத்த கைத்தட்டலுக்கிடையே பிரச்சார உரையை முடித்தார்.


Pengarang :