ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் சிறப்பான பொருளாதார நிர்வாகத்திற்கு உள்நாட்டு உற்பத்தியில் மாநில அரசின் பங்களிப்பே சான்று

ஷா ஆலம், ஜூலை 8- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய
பங்களிப்பை வழங்குவதில் சிலாங்கூர் அரசு கடந்தாண்டு பெற்ற வெற்றி
பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அது சிறப்பான முறையில் செயல்பட்டு
வருவதை நிரூபித்துள்ளது.

பொருளாதார ஜாம்பவான் என்ற அடையாளத்தை தக்க வைத்துக்
கொள்வதற்காக முழு நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் தீவிர கவனத்துடன்
முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் என்றவுடன் அதன் வெற்றிகளைக் கண்டு சிலர் பெருமிதம்
கொள்கின்றனர், சிலர் பொறாமை கொள்கின்றனர். பொருளாதாரத்தைப்
பொறுத்தவரை நாம்  தான் பெரியவர்கள் என்பதை நாம் நிரூபித்து
விட்டோம் என அவர் சொன்னார்.

நாம் பின் தங்கியுள்ளதாக அல்லது மந்தமாக உள்ளதாக சிலர் கூறலாம்.
எனினும், தரவுகள் வேறு மாதிரியாக காட்டுகின்றன. தரவுகள் ஒரு
போதும் பொய் கூறாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற
மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்
போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தாம் மந்திரி புசாராக பதவியேற்ற போது மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் மாநிலத்தின் பங்களிப்பு 23.7 விழுக்காடு மட்டுமே
இருந்ததாக கூறிய அவர், கடந்தாண்டு அந்த எண்ணிக்கை 25.5
விழுக்காடாக அதாவது தேசிய  மொத்த உற்பத்தி பங்களிப்பில் கால் பங்காக உயர்ந்துள்ளது
என்றார்.

பல்வேறு விஷயங்களில் நிச்சயமற்ற சூழலை நாம் எதிர்நோக்கிய
போதிலும் பொருளாதார பங்களிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து
கடந்தாண்டு 25.5 விழுக்காடாக பதிவாகியுள்ளது என்றார் அவர்


Pengarang :