ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநிலத் தேர்தல்- சிலாங்கூரில் கூடுதலாக 2,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

ஷா ஆலம், ஜூலை 8- மாநிலத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக  சிலாங்கூரில் கூடுதலாக 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசைன் தெரிவித்தார்.

மாநில காவல்துறையில் 14,000  உறுப்பினர்கள் உள்ளதாகவும்  அவர்களில் 10,000 பேர் மாநிலத் தேர்தலுக்காகப் பயன் படுத்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

எஞ்சியுள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் வழக்கமான முக்கிய கடமைகளை தொடர்ந்து செய்வார்கள் என்று நேற்று இங்கு நடைபெற்ற மாநில தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

சிலாங்கூரில் 70 பிரச்சனைக்குரிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) மற்றும் சிறப்புப் பிரிவு

அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றும் ரஸாருடீன் தெரிவித்தார். எந்தவித அச்சுறுத்தல்களும் இன்றி மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க வெளியே செல்வதை உறுதி செய்வதே இந் நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் சொன்னார்.

பிரச்சாரத்தின் போது மதம், ஆட்சியாளர்கள் மற்றும் இனம் (3ஆர்) சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எழுப்ப வேண்டாம் என்று அவர் அனைத்து கட்சிகளுக்கும் அவர் நினைவூட்டினார்.

இது போன்ற உணர்ச்சிகரமான  விஷயங்களைத் தொட்டால் போலீஸ் விசாரணையில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் எச்சரித்தார்.

மொத்தம் 37 லட்சத்து 47 ஆயிரத்து 057 வாக்காளர்களைக் கொண்ட சிலாங்கூர் மாநிலத்துடன் சேர்த்து நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களிலும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.


Pengarang :