ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் பொது காப்புறுதித் திட்டம்- ஜூன் மாதம் வரை 52.4  லட்சம் பேர் பதிவு

உலு லங்காட், ஜூலை 8- இவ்வாண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தில் 52 லட்சத்து 40 ஆயிரம் பேர் பதிவு பெற்றுள்ளனர்.

அவர்களில் சுமார் 35 லட்சம் பேர் சிலாங்கூர் மாநில வாக்காளர்களாக உள்ள வேளையில் மேலும் 750,000 பேர் பிறந்து 30 நாள் ஆன குழந்தைகள் முதல் ஆறு வயது வரையிலான சிறார்களாவர் என்று இன்சான் ஒருங்கிணைப்பாளர் நுர் ஷூஹைடா ஜமாலுடின் கூறினார்.

மேலும், 7 முதல் 19 வயதுக்குட்பட்ட 900,843 பேரும் 81,79 பொது மக்களும் இந்த காப்புறுதிப் பாதுகாப்பை பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

எனினும், இந்த காப்புறுதியின் முக்கியத்துவத்தை பலர் இன்னும் உணராமலிருக்கின்றனர்.  இதுவரை இந்த திட்டத்தில் பங்கு கொண்டவர்களில் சுமார் 100 பேர் மட்டுமே காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

ஒரு சிலர் இயல்பாகவே இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். விபத்து அல்லது இறப்புகள் நிகழும் பட்சத்தில் எங்களை தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் இந்த காப்புறுதி திட்டத்தில் பதிவுபெற்றுள்ளனரா என்பதையும் அவர்களுக்கு இழப்பீடு பெறும் தகுதி உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.

லாமான் நியாகா பண்டார் பாரு பாங்கியில் நேற்று நடைபெற்ற கித்தா சிலாங்கூர் மடாணி மலேசியா ஒற்றுமை விழாவின் போது அவர் இதனைக் கூறினார்.

இந்த இன்சான் காப்புறுதி திட்டத்தை சிலாங்கூர் அரசின் துணை நிறுவனமான சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ) வழி நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பிறந்து 30 நாள் ஆன குழந்தை முதல் 80 வயது வரையிலான முதியவர்கள் வரை பயன் பெற முடியும்.


Pengarang :