ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் தொகுதியில் நடைபெற்ற மலிவு விற்பனையில் 500க்கு மேற்ப்பட்டோர் பங்கேற்பு

கிள்ளான், ஜூலை 8- இங்குள்ள கம்போங் பத்து பிலா, சிராஜூடின் அல்-அனுவார் பள்ளிவாசலில் நடைபெற்ற கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான ஏசான் ரஹ்மா மலிவு விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது.

இங்கு நாற்பத்தைந்து நிமிடங்களில் 300 கோழிகளும் 200 தட்டு முட்டைகளும் விற்றுத் தீர்ந்ததாக சிலாங்கூர் மாநில விவசாய  மேம்பாட்டுக் கழகத்தின் பிரதிநிதி நோர்லிண்டா அபு காசிம் கூறினார்.

சுமார் 500 பேர் கலந்து கொண்ட இந்த மலிவு விற்பனையில் 18,000 வெள்ளி விற்பனை பதிவு செய்யப்பட்டதோடு பிற்பகல் 12.30 மணிக்கெல்லாம் அனைத்துப் பொருள்களும் விற்கப்பட்டு விட்டதாக அவர் சொன்னார்.

இந்த விற்பனையை காலை 10.00 மணிக்குதான் தொடங்கினோம். எனினும், நாற்பது நிமிடங்களில் 300 கோழிகளும் 200 தட்டு முட்டைகளும் விற்கப்பட்டு விட்டன. 

அரிசி, மீன் போன்ற பொருள்களும் பொது மக்களின் அதிக வரவேற்பைப் பெற்ற பொருள்களாக விளங்கின. எனினும், இறைச்சி விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. முஸ்லீம்கள் அண்மையில்தான் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடியது இந்த மந்தமான விற்பனைக்கு காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இன்றைய விற்பனைக்கு 500 கோழிகள், 300 தட்டு முட்டைகள், 300 பாக்கெட் அரிசி, 144 போத்தல் 5 கிலோ சமையல் எண்ணெய், தலா 300   பாக்கெட் மீன் ஆகியவையும் கொண்டு வரப்பட்டன என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :