ECONOMYNATIONAL

சிலாங்கூரில் 9 தொகுதிகளில் அமானா கட்சி போட்டியிடும்

கிள்ளான், ஜூலை 18 –  எதிர்வரும் மாநிலத் தேர்தலில் உலு பெர்ணம் உட்பட மாநிலத்தில் ஒன்பது தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக சிலாங்கூர் மாநில பார்ட்டி அமானா ராக்யாட் கட்சி அறிவித்துள்ளது.

உலு பெர்ணமில் அமானா போட்டியிடுவதற்கு உயர்மட்டத் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் ஜெராம் தொகுதியில் பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர்  போட்டியிடுவார் என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.

அமானாவுக்கு முன்பு ஜெராம் உட்பட ஒன்பது இடங்கள் இருந்தன. ஆனால் விவாதங்களுக்குப் பிறகு, பாரிசான் நேஷனல் ஜெராமிலும் அமானா உலு பெர்ணமிலும்  போட்டியிடுவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது  என்று சொன்னார்.

 ஷப்பாடு நெடுஞ்சாலையை ஒட்டிய தாமான் முத்தியாரா புக்கிட் ராஜாவில் வெள்ளத் தடுப்புக்  குளம் மற்றும் அது தொடர்பான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் இதனைக் கூறினார்

ஸ்ரீ செர்டாங் தொகுதியில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று  அதன் நடப்பு உறுப்பினர்   டாக்டர் சித்தி மரியா மாமுட் அறிவித்ததைத் தொடர்ந்து  அத்தொகுதியில்  அமானா ஒரு இளம் வேட்பாளரை நிறுத்தும் என்று இஷாம் கூறினார்.

கடந்த  2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலில் டாக்டர் சித்தி மரியா 14,363 வாக்குகள் பெரும்பான்மையில் அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.

 பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மற்றும் பாரிசான்  இடையிலான பேச்சுவார்த்தை முற்றுப் பெற்று சிலாங்கூரில் உள்ள 56 மாநில சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இஷாம் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :